கோவில் நிலம் பிளாட் போட்டு விற்பனை : மீட்டது அறநிலையத்துறை
கோவில் நிலம் பிளாட் போட்டு விற்பனை : மீட்டது அறநிலையத்துறை
கோவில் நிலம் பிளாட் போட்டு விற்பனை : மீட்டது அறநிலையத்துறை
கோவை : வீட்டு மனையாக பிரித்து விற்கப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்பு கோவில் நிலத்தை, அதிரடியாக மீட்டனர் அறநிலையத்துறை அதிகாரிகள்.
திருப்பூரைச் சேர்ந்தவர் விஸ்வநாதன்; பனியன் ஏற்றுமதி செய்து வருகிறார். இவர், திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட காங்கயம் வட்டம், ஊதியூர் கிராமத்திலுள்ள உத்தண்ட வேலாயுதசாமி கோவிலுக்கு சொந்தமான, 26 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்திருந்தார். அதில், 16 ஏக்கரை வீட்டு மனையாக பிரித்து விற்பனை செய்து வந்தார். மீதமுள்ள 10 ஏக்கரில் முருங்கை, தென்னை சாகுபடி செய்து வந்தார். வீட்டு மனையாக்கிய 16 ஏக்கரை, இரண்டே முக்கால் சென்ட் அளவு கொண்ட சிறிய சைட்டுகளாக பிரித்தார். அதற்குரிய லே அவுட் அமைத்து, தார் ரோடு போட்டார். அங்கு சிறு மரக்கன்றுகளை நட்டு "வெற்றி மாநகர்' என்ற பெயரில் பெரிய அலங்கார வளைவையும் ஏற்படுத்தினார். அதோடு அருகே ஒரு ஷெட் அமைத்து, அங்கு அலுவலகத்தை ஏற்படுத்தி இரண்டு பணியாளர்களை நியமித்தார். ஒரு சைட்டின் விலை 25 ஆயிரம் ரூபாய் என்று கூறி விற்பனை செய்தார். இத்தகவலை நோட்டீஸ் அச்சடித்து குடியிருப்பு பகுதிகளில் வினியோகம் செய்து, விற்பனையை பலப்படுத்தினார். இதுவரை 100 சைட்டுகளுக்கு மேல் விற்பனையாகியுள்ளது. இடத்திற்கு தேவையான குடிநீர் மற்றும் வடிகால் வசதி ஏற்படுத்திக் கொடுப்பதாக சைட் வாங்கியவர்களிடம் உறுதியளித்துள்ளார்.
இது குறித்த தகவல், அறநிலையத்துறை கமிஷனர் சம்பத்திற்கு தெரிய வந்தது. அவரது உத்தரவுப்படி கோவை மண்டல அறநிலையத்துறை இணை கமிஷனர் அசோக், டி.ஆர்.ஓ.,(கோவில் நில மீட்பு) சுப்ரமணியன், நிலஅளவையர், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர், செயல் அலுவலர்கள், அறநிலையத்துறை ஆய்வாளர்கள் உள்ளிட்ட குழுவினர், சரியான ஆவணங்களோடு சென்று கோவில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்திருந்தவர்களை விரட்டியடித்து, தங்கள் வசம் நிலத்தை கொண்டுவந்தனர்.
கோவை மண்டல அறநிலையத்துறை இணை கமிஷனர் அசோக் கூறியதாவது: கோவில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தது, பிளாட் போட்டு விற்பனை செய்தது, பொதுமக்களை ஏமாற்றியது போன்ற குற்றங்களுக்காக அவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் நிலம் அல்லது வீட்டு மனை வாங்கும் முன், கோவிலிற்கு சொந்தமான நிலமா என்று சம்பந்தப்பட்ட வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலரிடமுள்ள பதிவேடுகளில் சரிபார்த்து அதன் பின் வாங்கலாம். கோவில் நிலத்தை மீட்பதற்கு சட்டப்பூர்வமான காலவரையறை இல்லை. அதனால், எப்போது வேண்டுமானாலும் மீட்கலாம். மீட்கப்பட்ட கோவில் நிலம் பல கோடி ரூபாய் மதிப்பு பெறும். இவ்வாறு அசோக் கூறினார்.